வாட்ஸ்-ஆப் செயலியில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளைப் பயன்படுத்தும் வகையில் புதிய மாற்றம் வரப் போவதாக மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் ஆப் செயலியை இளைஞர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ் ஆப்க்கு பயனர்களாக உள்ளார்கள். இந்த வாட்ஸ் ஆப் பிறருடன் தகவல்களை எளிதில் பகிர்ந்துக் கொள்ளவும், பயனர்கள் விரும்பும் பல முக்கிய அம்சங்களையும் கொண்டுள்ளது.
ஆடியோ, வீடியோ காலிங் வசதி, ஸ்டேட்டஸ் அப்டேட், மெசேஜிங் வசதி, குரூப் சேட் எனப் பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது. பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
மெட்டா நிறுவனம் பல்வேறு புதிய வசதிகளை பயனர்களின் வசதிக்கு ஏற்ப தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது. சமீபத்தில் வாய்ஸ் நோட்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தி இருந்தது. அதேபோல் ‘லாக் சாட்’ என்னும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் வாட்ஸ்-ஆப் செயலியில் ஒரே நேரத்தில் இரண்டு வாட்ஸ்ஆப் கணக்குகளைப் பயன்படுத்தும் வகையில் புதிய மாற்றம் வரப்போவதாக மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், வாட்ஸ்ஆப் பயனாளர்கள், விரைவில் ஒரே கைபேசியில், இரண்டு வாட்ஸ்ஆப் கணக்குகளை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், ஒருவர் தான் வைத்திருக்கும் இரண்டு மொபைல் எண்களிலும், வாட்ஸ்ஆப்பில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை கொண்டு வர முடியும். ஒரே செயலியில், இனி இரண்டு வாட்ஸ்ஆப் கணக்குகளை ஒருவரால் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி இன்னும் ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இனி, வாட்ஸ்ஆப்பில் ஒரு எண்ணை லாக் அவுட் செய்ய வேண்டிய அவசியமோ அல்லது இரண்டு கைப்பேசிகளைப் பயன்படுத்தும் பிரச்னையோ, மாற்றி மாற்றி வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் போது தவறானவர்களுக்கு தகவல் அனுப்பிவிடுவோமோ என்ற அச்சமோ தேவையில்லை என்றும் மெட்டா குறிப்பிட்டுள்ளது.
வாட்ஸ்ஆப் செட்டிங்கில் சென்று உங்கள் பெயர் இருக்கும் இடத்துக்கு நேராக இருக்கும் அம்புக்குறியை கிளிக் செய்து, ஆட் அக்கவுண்ட் என்று சேர்த்துக் கொள்ளலாம். அதிகாரப்பூர்வ வாட்ஸ்ஆப் செயலிகளை மட்டும் டவுன்லோடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.







