கலவரத்துக்குள்ளான கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை அரசே ஏற்று நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது. அப்போது, பள்ளி கட்டடம், பொருட்கள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால், மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாரும், கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவும் தனித்தனியாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளி மீண்டும் செயல்பட அரசு அனுமதித்துள்ளதாகவும், இது மாணவர்கள் – பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதால் பள்ளியை அரசே ஏற்று நடத்த உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல். ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
0அந்த மனுவில், இதே பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டும் ஒரு மாணவர் உயிரை மாய்த்து கொண்டதாகவும், நான்கு ஆண்டுகளுக்கு முன் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பள்ளிக்கு வெளியில் நிறுத்தப்பட்டதால் பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த முதல் சம்பவத்திலேயே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவி மரண சம்பவம் நிகழ்ந்திருக்காது எனவும் தெரிவித்துள்ளார். தற்போது, இப்பள்ளியில் படித்ததால் தங்கள் குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்க்க மறுப்பதாகவும், இப்பள்ளியில் கட்டணம் செலுத்தி விட்டதால் மற்றொரு பள்ளியில் சேர்க்கை பெற இயலவில்லை எனவும் பெற்றோர்கள் கூறுவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இதனால், பள்ளியை அரசே ஏற்று நடத்த கோரி கடந்த 14-ம் தேதி மனு அளித்தும் அது பரிசீலிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சிறப்பு அதிகாரியை நியமித்து பள்ளியை அரசு தன் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.







