பீகாரை தொடர்ந்து சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் (எஸ்.ஐ.ஆர்.) கடந்த நவம்பர் 4ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 4 ஆம் தேதி இப்பணிகள் நிறைவடைய இருந்த நிலையில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று 2 முறை நீட்டிப்பு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து டிசம்பர் 14 ஆம் தேதி விண்ணப்பங்கள் பெறுவதற்கான பணிகள் நிறைவடந்தன. இந்த நிலையில் தற்போது தமிழ் நாட்டில் மாவட்டம் வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதை தொடர்ந்து தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”எஸ்ஐஆர் பணிகளுக்கு முன்பு 6,41,14, 587 வாக்காளர்கள் இருந்தனர். வரைவு வாக்காளர் பட்டியலில் 5, 43, 76,755 பேர் உள்ளனர். இடம்பெயர்ந்தோர் பட்டியல் இப்பட்டியலில் இடம்பெறவில்லை” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் பெண் வாக்காளர்கள் 2,77,60,332 பேர் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 2,66,63,233 பேர் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 7,191 பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 97,32,832 பேர் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர். மூலம் பட்டியலில் இருந்த 26,94,672 இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர் அல்லது இணையத்தில் கூட விண்ணப்பிக்கலாம். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும், அதில் கலந்துகொண்டு ஜனவரி 18 ஆம் தேதிக்குள் வாக்காளர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இறந்தவர்கள், முகவரி இல்லாதவர்கள் உள்ளிட்ட இறுதிப்பட்டியல் பிப்ரவரியில் வெளியிடப்படும்” எனத் தெரிவித்தார்







