நாட்டின் 77-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது.
தமிழக போக்குவரத்து காவல் படையினரின் வாகன அணிவகுப்புடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசு தின விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார். அவரை தொடர்ந்து ராணுவ வாகன அணிவகுப்புடன் ஆளுநர் ஆர்.என்.ரவி, விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி, கைகுலுக்கி வரவேற்றார். இதைத்தொடர்ந்து காலை 8 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது அந்தப் பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. அந்த நேரத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. 5-வது முறையாக ஆளுநர் தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து ராணுவ படைப்பிரிவு, கடற்படைப் பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசிசை பிரிவு, வான்படை பிரிவினர் அணிவகுத்து வந்து ஆளுநருக்கு வணக்கம் செலுத்தினர். அதை அவர் ஏற்றுக்கொண்டார்.
அப்போது, கடற்படை ஊர்தியில் போர்க் கப்பலின் சிறிய வடிவம், வான்படை ஊர்தியில் சிறிய வடிவிலான விமானம், கடலோர காவல்படை ஊர்தியில் சிறிய வடிவிலான படகுகள் ஆகியவை அணிவகுத்து கொண்டு வரப்பட்டன. அதைத்தொடர்ந்து சி.ஐ.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்., ஆர்.பி.எப்., தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு, தமிழ்நாடு பேரிடர் நிவாரணப்படை, கடலோர பாதுகாப்புக்குழு, ஊர்க்காவல் படை (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்பட 30 படைப்பிரிவினர் அணிவகுத்து சென்றனர்.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்கள், சிறந்த போலீஸ் நிலையத்திற்கான கோப்பைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு வழங்கினார். பின்னர், பதக்கம் பெற்றோர் குழுவாக முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதைத்தொடர்ந்து அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது.







