தேவிப்பட்டினம் கடல்பகுதியில் ரூ 7.50 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை கடலோர காவல் படை மற்றும் வன துறையினர் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் கடலோர காவல் படையினருக்கு, கடல் அட்டைகள் கடத்துவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கடலோர காவல் படை சார்பு ஆய்வாளர் அய்யனார், நுண்ணறிவுப் பிரிவு தலைமை காவலர் இளையராஜா மற்றும் ராமநாதபுரம் உதவி வன பாதுகாவலர் சுரேஷ், வனவர் ராஜேஷ்குமார் ஆகியோர் கூட்டாக, ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தேவிப்பட்டினத்தை சேர்ந்த பாலமுருகன் என்ற குணா (32) என்பவரது
நாட்டுப்படகில் பச்சை கடல் அட்டைகள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அங்கு
11 பிளாஸ்டிக் வாளிகளில் இருந்த 150 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை
பறிமுதல் செய்தனர்.
அவற்றின் மதிப்பு ரூ. 7.50 லட்சம் ஆகும். இதை தொடர்ந்து, ராமநாதபுரம் வனத் துறையினர் வழக்கு பதிவு செய்து, கடல் அட்டைகளை பதுக்கியவரை காவல் துறையினர் தேடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
—ம. ஸ்ரீ மரகதம்







