மதுரையில் ‘நியோ மேக்ஸ்’ ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் அந்நிறுவனத்தின் இயக்குநர், முகவர் உட்பட இதுவரை 6-வது இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது.
மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ‘நியோமேக்ஸ்’ நிறுவனம் மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, திருவாரூர், திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு பெயர்களில் கிளை நிறுவனங்களைத் தொடங்கி செயல்படுத்தி வந்திருக்கின்றனர். இவர்கள் தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் முதலீடு செய்யும் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும் மாதம் 12 முதல் 30 சதவீத வட்டி தருவதாகவும் தெரிவித்ததன் அடிப்படையில் பல்வேறு நபர்கள் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.
ஆனால், முறையாக பணத்தை திரும்ப வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதால் முதலீடு செய்த நபர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்ததன் அடிப்படையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநரான வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் மீது பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் இந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான கிளை நிறுவனங்களான 34 நிறுவனங்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் மேற்கொள்ளப்பட்டு முக்கியமான டாக்குமென்ட்கள், ஹார்ட் டிஸ்க்கள், உயர்ந்த கார்கள், தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நியோமேக்ஸ் நிறுவனத்தின் பத்துக்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களின் முக்கிய இயக்குநர் பத்மநாபன் உள்ளிட்ட சைமன் ராஜா , கபில், இசக்கி முத்து மற்றும் சகாய ராஜா போன்றோர் பொருளாதார குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் தற்போது நியோமேக்ஸ் மோசடி வழக்கில் அதன் நிறுவன இயக்குநர் விருதுநகர் – மருளுத்து மீனாட்சிபுரம் பகுதியை சார்ந்த மாரிச்சாமி என்பவரை ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளியில் வைத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மாரிச்சாமி என்பவர் நியோமேக்ஸ் அதன் துணை நிதி நிறுவனத்தில் இயக்குநர் ஆக உள்ளார்.
மேலும் நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் வழக்கில் முக்கிய குற்றவாளிகளான வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் வெளிநாடு செல்ல முயற்சி தாலோ அல்லது வெளிநாடுகளில் இருந்து மீண்டும் இந்தியா திரும்பி வந்தாலோ விமான நிலைய வளாகத்திலேயே அவர்களை கைது செய்ய வேண்டுமென விமான நிலையங்களுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி உள்ளதோடு
நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் முக்கிய இயக்குனர்களின் 160 வங்கி கணக்குகளின் பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டுள்ளன.
நடவடிக்கைகள் துரிதமாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்டு வந்தாலும் இதன் முக்கிய இயக்குநர்களான கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், வீரசக்தி ஆகியோரை கைது செய்ய தொடர்ச்சியாக சுணக்கம் காட்டி வருவதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் வேதனடைந்துள்ளனர். மேற்கண்ட 3 இயக்குநர்களும் இந்த நிதி நிறுவனத்தின் முக்கிய இயக்குனர்களாக கருதப்படக் கூடிய சூழலில் இவர்கள் முன் ஜாமின் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என பாதிக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கக் கூடிய சூழலில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் முன்ஜாமின் பெறுவதற்கு வசதியாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவர்களை தப்பிக்க வைக்கும் நோக்கிலேயே தொடர்ச்சியாக செயல்படுவதாகவும், இதுவரை சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய எந்த ஒரு நடவடிக்கையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மேற்கொள்ளவில்லை எனவும் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தை உலுக்கிய ஆருத்ரா ஐஎஃப்எஸ் நிதி நிறுவன மோசடிகளின் வரிசையில் தற்போது நியோ மேக்ஸ் நிதி நிறுவனமும் இணைந்துள்ளது. நியோ மேக்ஸ் என்ற மோசடி நிறுவனமும் அதன் 63 துணை நிறுவனங்களும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் கிளம்பி திகைக்க வைக்கின்றன.
- பி.ஜேம்ஸ் லிசா











