சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை பேசும் ‘தி ஹன்ட் ஃபார் வீரப்பன்’ என்னும் ஆவணத் தொடர் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானதையடுத்து வீரப்பன் குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வரும் நிலையில், அந்த படத்தை இயக்கிய செல்வமணி செல்வராஜ் வீரப்பனின் அரசியல் நிலைப்பாடு குறித்து ஒரு நேர்காணலில் பேசியுள்ளார்.
1990கள் மற்றும் 2000களின் முற்பகுதியில் நடந்த பயங்கர கொள்ளை சம்பவம் பற்றிய புதிய நான்கு பாகங்கள் கொண்ட ஆவணப்படமான ‘தி ஹன்ட் ஃபார் வீரப்பன்’ என்ற தொடர் கடந்த ஆகஸ்ட் 4 , 2023 அன்று நெட்ஃப்ளிக்ஸ்-ல் வெளியாகி பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்தத் தொடரில் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், வீரப்பனின் சொந்தக் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரின் நேர்காணல்களும், அரிய காப்பகக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளதோடு, ஒரு மிகப்பெரிய ஆய்வும் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் செல்வமணி செல்வராஜ், தயாரிப்பாளர்கள் அபூர்வ பக்ஷி மற்றும் மோனிஷா தியாகராஜன் ஆகியோரிடம் பிரத்யேக நேர்காணல் சமீபத்தில்
நடந்தது. அதில் வீரப்பனின் கடந்த காலம், அரசியல் மற்றும் தத்துவங்கள் குறித்தனா விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.
அப்போது படத்தின் இயக்குனர் செல்வமணி செல்வராஜ் பேசும்போது இந்த ஆவணத் தொடரைப் எடுப்பதற்கு முன், வீரப்பனைப் பற்றி எனக்குத் தெரிந்ததெல்லாம், செய்தித்தாளில் வந்த ஒரு மங்கலான காட்சி, மறக்க முடியாத மீசை மற்றும் எல்லோரும் அவரைப் பிடிக்க போராடுகிறார்கள் என்ற விஷயம் மட்டும்தான். பிறகு இந்த கதை களத்தை ஆவணமாக எடுக்க முயலும் போதுதான் தனிப்பட்ட முறையில், அந்த மனிதனை யார் உருவாக்கினார், அவர் ஏன் ஒரு பயங்கரமான குற்றவாளி ஆனார், மறுபுறம் அவர் எப்படி பல மக்களால் நேசிக்கப்படக் கூடிய நபராக மாறினார் என்பதை அறிய நான் விரும்பினேன்.
குறிப்பாக எத்தனையோ பேரை கொன்றான், எத்தனையோ மிருகங்களைக் கடத்தி வந்தான் அப்படி இருந்தும் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு அவர் வீரனாக தெரிந்துள்ளார். இதனால் தான் இப்படி இரு துருவமுனையில் பயணித்த வீரப்பன் குறித்து தெரிந்து கொள்ள நான் விரும்பினேன். இந்த விஷயமே வீரப்பனைப் பற்றி அறிய, அவனது வாழ்க்கையில் உள்ள
அனைவரையும் பற்றி மக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, ஒரு எளிய தேடல்தான் இந்தப் பயணத்தில் எங்களை வழிநடத்தியது என கூறியுள்ளார்.
மேலும், அங்கு மக்களிடம் வீரப்பன் குறித்த தகவலை பெற தங்கள் குழுபட்ட சிரமங்கள் குறித்தும் பேசியிருந்த இயக்குனர் செல்வமணி, வீரப்பன் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், அவரை அரசியல்வாதியாக பார்க்கீறீர்களா என்ற கேள்விக்கும் பதிலளித்துள்ளார். அப்போது அவர், வீரப்பன் தனது போர்க் கொள்கையின் மூலம் தமிழகத்தில் புவிசார் அரசியலை பேச முயன்றகாவும், காடுகளில் இருந்தாலும்
அவரும் அரசியல் தெரிந்தவர் தான் நீங்கள் படித்து கற்றுக்கொள்ள வேண்டியதில்லை, சில சமயங்களில் வாழ்க்கை உங்களுக்கு அரசியலை கற்றுக்கொடுக்கிறது.
அந்த வகையில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியின் கருத்துகளில் நான் மிகவும் அரசியல் ரீதியாக இருக்கக்கூடிய விஷயங்களை காண்கிறேன். உயிர்வாழ்வது உங்களுக்கு அரசியலைப் பற்றி நிறைய கற்றுக்கொடுக்கிறது. சக்தி என்றால் என்ன, நீங்கள்
அதிகார அமைப்பில் எங்கே இருக்கிறீர்கள் என்பதை அவர் உணர்த்தியதோடு, தமிழ் மொழியின் மீது அவர் உணர்ந்த விதத்தில், ஒரு பிம்பத்தை உருவாக்க விரும்பினார், அதில் அவர் வெற்றிகரமாகவும் இருந்தார். மேலும் அதிகார வட்டாரங்களில் அவர் எப்போதும் பேசப்படுவார். அது ஒரு கைது என்றாலும் , ஒரு நீதிமன்ற உத்தரவு என்றாலும் மற்றும் ஒரு கான்ஸ்டபிளின் மரணம் குறித்தான தண்டனை விவரங்கள் என்றாலும் அதில் அவரது அரசியல் பிம்பம் இருந்தது. அதனால் தான் அவரது கைது தேர்தல் அறிக்கையில் முக்கிய புள்ளியாக மாறியது. சிலருக்கு பதவி உயர்வுகளும் கிடைத்தது. அதனால் அவருடைய கதையிலிருந்து அரசியலை பிரிக்க முடியாது. அவர் இயல்பிலேயே அரசியலில்
இருந்தவர் தான் என அவர் கூறியுள்ளார்.
படத்தின் தயாரிப்பாளரான அபூர்வா அந்த நேர்காணலில் பேசும்போது, வீரப்பன் விஷயத்தில் நிறைய சம்பவங்கள் மறைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இதற்கு முன்னாள் வீரப்பனின் வரலாறு குறித்து ஏராளமான தொடர்களும், திரைப்படங்கள் வெளிவந்தாலும் புத்தங்கங்களின் வழியே அவரை குறிப்பிட்டது போல விவரமான தகவல்கள் வெளிக்கொணரப்படவில்லை. எனவே தான் நாமே உண்மையை ஆராய விரும்பி
இதை உருவாக்கினோம். எனக்கு ஆவணப்படங்கள் என்றால் மிகவும் பிடித்தது, அந்த வகையில் இந்த படத்தில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கொடுத்துள்ள உள்ளீடுகள் தான் முக்கியமானவை என நான் கருதுகிறேன் என தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா











