அயலான் டீசரை படக்குழு தயார் செய்து வருவதாகவும், விரைவில் அதை வெளியிடுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
டாக்டர், டான், பிரின்ஸ் ஆகிய படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் அயலான். இப்படத்தினை 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஆர்.ரவிக்குமார் இயக்கி உள்ள இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனுடன், ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
4500+ VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்ஷன் திரைப்படமாக ‘அயலான்’ இருக்கும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. சயின்ஸ் பிக்ஷன் காமெடி ஜானரில் உருவாகி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் எப்பொழுது திரைக்கு வரும் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.
சமீபத்தில் இப்படத்தின் ஒரு சிறிய கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்திருந்தது. அதேபோல், கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ’ஜப்பான்’ திரைப்படமும் தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்படும் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அயலான் டீசரை படக்குழு தயார் செய்து வருவதாகவும் விரைவில் அதை வெளியிடுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.







