அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றி வரும், தற்காலிக ஆசிரியர், 4ம் வகுப்பு மாணவனை மாடியில் இருந்து தூக்கி வீசி, கொலை செய்த கொடூர சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹாட்லி கிராமத்தில், அரசு உதவிப்பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர்களாக முத்தப்பா மற்றும் கீதா ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். அதே பள்ளியில், ஆசிரியர் கீதாவின் மகன் பரத், 4ம் வகுப்பில் படித்து வந்தார்.
இந்நிலையில், ஆசிரியர் கீதாவை ஆசிரியர் முத்தப்பா முன்விரோதம் காரணமாக மண்வெட்டியால் தாக்கியுள்ளார். இதைபார்த்த அவரின் மகன் பரத், தாயை காப்பாற்ற சென்றுள்ளார். அப்போது, உச்சகட்ட கோபத்தில் இருந்த முத்தப்பா மாணவன் பரத்தை, இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கி, மாடியில் இருந்து தூக்கி வீசியுள்ளார்.
இந்த கொடூர தாக்குதலில் சிறுவன் பரத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள ஆசிரியர் முத்தப்பாவை தேடி வருகின்றனர்.







