பள்ளிக்கூடம் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில் போஸ்டர் வெளியிட்ட இயக்குநர் தங்கர் பச்சான், இந்த திரைப்படத்தை மீண்டும் பள்ளி மாணவர்களுக்கு காண்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறு வயதில் பள்ளிக்கு செல்ல அடம்பிடித்த அனுபவம், நிச்சயமாக அனைவருக்கும் இருக்கும். பள்ளிப் பருவ அனுபவங்களை கண்முன் நிறுத்தும்படி, தங்கர் பச்சான் இயக்கத்தில் 2007-ம் ஆண்டு வெளியான திரைப்படமே பள்ளிக்கூடம். நரேன், சினேகா, சீமான் உள்ளிட்டோருடன் தங்கர் பச்சானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மூடப்படும் நிலையில் உள்ள சேதமடைந்த பள்ளியை, முன்னாள் மாணவர்கள் இணைந்து மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதுதான் படத்தின் கதைக்களம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பள்ளியில் கல்வி அதிகாரி ஆய்வுக்கு செல்லும்போது, ஆசிரியர்கள் முன்னதாகவே மாணவர்களை தயார்படுத்தி வைத்திருக்கும் காட்சியை இயக்குநர் தங்கர் பச்சான் நகைச்சுவையாக எடுத்துக்கூறி இருப்பார். பள்ளிப் பருவத்தில் எல்லோர் மனதிலும் துளிர்விடும் காதலை காட்சிப்படுத்திய விதத்திலும் சரி, முன்னாள் மாணவர்கள் சந்திப்பின்போது முதியவர் ஒருவர் பழைய காதல் நினைவுகளை பகிர்ந்த காட்சியிலும் சரி, முத்திரை பதித்திருப்பார் இயக்குநர் தங்கர் பச்சான்.
தனியார் பங்களிப்புடன் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ’நம்ம ஸ்கூல்’ என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், பள்ளிக்கூடம் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதாக தங்கர் பச்சான் நினைவுகளை பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், பள்ளிக்கூடம் படத்திற்கு பின்னர், உலகின் மூலை முடுக்கில் உள்ளவர்கள் எல்லாம் தன்னை உருவாக்கிய பள்ளிக்கூடங்களைப் புனரமைத்துப் புதுப்பிக்க நன்கொடை வழங்கியதாக தெரிவித்துள்ளார். மேலும், பள்ளிக்கூடம் திரைப்படத்தை மாணவர்கள் மீண்டும் காண அரசு ஆணை பிறப்பிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் பள்ளிக்கு போகலாம்
நம்மை நாம் அங்கே தேடலாம்
சிலேட்டு குச்சி கடன் வாங்கலாம்
சிலேட்டில் பேரெழுதி பார்க்கலாம்
கொட்டு வச்ச வாத்தியாரை
தொட்டு வணங்கலாம்
முட்டிப்போட்டு நின்ன இடத்தை
முத்தம் கொடுக்கலாம்
எது எப்படியோ, பள்ளிக்கு செல்ல பிடிக்காமல் ‘காடு பதுங்குறோமே’ என்ற பாடலின் மனநிலையில் தொடங்கி ‘மீண்டும் பள்ளிக்கு போகலாம்’ என மனம் ஏங்குவதை யாராலும் மறுக்க முடியாது.