தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவது தொடர்பாக நாளை மறுநாள் சென்னையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலக அளவில் புகழ்பெற்றவை. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இதையடுத்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளை மறுநாள் கால்நடைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள், விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.







