தமிழ்நாட்டில் 4,967 நிவாரண முகாம் தயார்! – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில்  கனமழையால் ஏற்படும்  சூழ்நிலைகளை சமாளிக்க 4,967 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளதாக  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில்  வருவாய் மற்றும்…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில்  கனமழையால் ஏற்படும்  சூழ்நிலைகளை சமாளிக்க 4,967 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளதாக  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது;

தமிழ்நாட்டில் 400 பேரிடர் மீட்புக் குழு மற்றும் 4.967 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. கடற்கரையோர மாவட்டங்களில் 121 இடங்களில் புயல் மற்றும் பேரிடர் பாதுகாப்பு முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை! – சென்னை வானிலை ஆய்வு மையம்

நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் அதிக மழை பதிவாகியுள்ளது. கனமழையால் இதுவரை பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படாத நிலையை அரசு ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து, கனமழையால் ஏற்படும் எந்தவிதமான சூழ்நிலைகளையும் சமாளிக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
மக்களுக்கு முறையாக எச்சரிக்கை விடுத்த பின்னரே, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  அணை நிலவரங்கள் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளன.

சென்னையில் 169 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.  22 சுரங்கப் பாதைகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வானிலை மைய அறிவிப்புகளுக்கு ஏற்றவாறு அவற்றுடன் இணைந்து மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.