மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்கள் ஓராண்டிற்குள் நிரப்பப்படும் – முதலமைச்சர் ஸ்டாலின்!

மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இடஒதுக்கீட்டின்கீழ் அரசு பணியிடங்களை, ஓராண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம்…

மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இடஒதுக்கீட்டின்கீழ் அரசு பணியிடங்களை, ஓராண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், ரூ.1,763 கோடி மதிப்பீட்டில், மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, 

ஐக்கிய நாடு சபையில் மாற்றுத்திறனாளிகளின் அடிப்படை உரிமையை காப்பதற்கான ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இடஒதுக்கீட்டின் அடிப்படையில், அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை ஒரு ஆண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

ஒரு மாற்றுத்திறனாளி கூட மன வருத்தம் அடைந்து விடக்கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச கட்டாய கல்வி வழங்க சிறப்பு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 5 வகையான மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் வழங்கப்பட்டு வந்த பராமரிப்புத் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வருவாய்த் துறையின் மூலமாக வழங்கப்பட்டு வந்த மாதாந்திர தொகை ரூ.1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி மகளிருக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக இடைநிலை பராமரிப்பு மையம் மற்றும் மீண்டும் இல்லம் என்ற புதிய திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள், மீண்டும் சமுதாயத்தில் தன்னிச்சையாக வாழ வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் தடை இல்லாமல் கலந்துகொள்ளும் நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரை மற்றும் தூத்துக்குடி கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் நடக்கும் வகையில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு குடியிருப்பில் தரைதளத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.