தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் திறக்கக் கூடாது என காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வந்ததால் காவிரி ஒழுங்காற்று குழு, மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையிட்டது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட கோரி கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு தடைவிதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தரப்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காவிரி விவகாரம் தொடர்பான தமிழ்நாடு அரசின் வழக்கு கடந்த செப்டம்பர் 21ம் தேதி நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் விசாரணை வந்தது. அப்போது, ஆகஸ்ட் மாதம் முதல் தண்ணீர் திறப்பதில் கர்நாடகா பிரச்சனை செய்து வருவதாகவும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடகம் செயல்படுத்துவதில்லை எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கர்நாடக அரசு தரப்பில், தற்போதைய சூழலில் 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரை மட்டுமே திறக்க முடியும் என கூறப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு மட்டும் தண்ணீர் கேட்பதாக கூறிய கர்நாடக அரசு தரப்பு,
கர்நாடகாவில் குடிநீருக்கு தண்ணீர் தேவை உள்ளதால், தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை திறப்பதில் பிரச்னை உள்ளதாக தெரிவித்தது.
இதனை அடுத்து வாதங்களை கேட்ட நீதிபதிகள், காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கவும் நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.
நேற்று டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநில அதிகாரிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் மறு ஆய்வு மனுவை கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ளது. 3000 கன அடி நீரை தினந்தோறும் தமிழ்நாட்டிற்கு வரும் 15ம் தேதி வரை கொடுக்க வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என கர்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
தங்களுக்கு நீர் பற்றாக்குறை இருப்பதாலும், மாநிலத்தில் பல்வேறு போராட்டங்கள் நடப்பதாலும் ஆணையத்தின் தற்போதைய உத்தரவை செயல்படுத்த இயலாத சூழல் உள்ளது எனவே தமிழகத்துக்கு நினசரி 3000 கன அடி நீரை திறக்க வேண்டும் என்ற உத்தரவை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என கர்நாடக அரசு வலியுறுத்தியுள்ளது.