வடிவேலுவின் கிணத்தை காணோம் காமெடி பாணியை போல முழு செல்போன் டவரை காணவில்லையென, செல்போன் டவர் நிறுவனத்தின் மேலாளர், காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே எம்.பெருமாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இவருக்கு சொந்தமான இடத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு தனியார் நிறுவனம் சார்பில் மொபைல் போன் டவர் அமைக்கப்பட்டது. இந்த செல்போன் டவரை பாதுகாக்க காவலாளி ஒருவரையும் நியமித்து இருந்தனர். இந்த நிலையில் கடந்த ஜூலை மாத இறுதியில் வந்த பத்து பேர் கொண்ட, கும்பல் காவலாளியிடம் சில ஆவணங்களை காட்டி, இந்த செல்போன் டவர் செயல்படாமல் உள்ளது. எனவே இதை கழற்றி வேறு இடத்தில் அமைக்க உள்ளோம் என்று பாதுகாவலரிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் அந்த கும்பல் 30 லட்சரூபாய் மதிப்பிலான செல்போன் டவரை ராட்சத கிரேன் இயந்திரங்களைக் கொண்டு முழுவதுமாக கழற்றிச் சென்றுள்ளனர்,
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் செல்போன் டவரில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக அங்கு வந்து பார்த்தனர். அப்போது அங்கு செல்போன் டவரே மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். செல்போன் டவர் அமைக்க அடிப்பகுதியில் இருந்த கான்கிரீட் தூண்கள் மட்டுமே காட்சி அளித்துள்ளது, இதை கண்டு திடுக்கிட்ட அவர்கள் காவலாளியிடம் கேட்டபோது 10 பேர் கும்பல் செல்போன் டவரை கழட்டி சென்றதாக தெரிவித்தார். இதுகுறித்து பராமரிப்பு ஊழியர்கள் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர், இதுகுறித்து செல்போன் டவர் பராமரிப்பு மேலாளர் தமிழரசன் வாழப்பாடி காவல் நிலையத்தில் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.
தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில் செல்போன் டவரை திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஏமன்குளம் பகுதியைச் சேர்ந்த நாகமுத்து, வாழப்பாடி காமராஜர் நகர் ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்த ராகேஷ் சர்மா மற்றும் துாத்துக்குடி மாவட்டம் ஏரல் ஆழ்வார் திருநகர் பகுதியை சேர்ந்த சண்முகம் ஆகியோர் தலைமையில் பத்து பேர் கொண்ட கும்பல் திருடி ஸ்ரீவில்லிபுத்துாரில் விற்பனை செய்தது தெரியவந்தது.
30 லட்சரூபாய் மதிப்பிலான மொபைல் போன் டவரை முழுவதுமாக திருடி சென்ற 3 கொள்ளையர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். திருடிச்செல்லப்பட்ட செல்போன் டவர், ஜெனரேட்டர் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இந்த கொள்ளையில் தொடர்புடைய மேலும் 7 பேரை தேடி வருகின்றனர்.
இச்சம்பவத்தைப் போன்றே ஒரு கும்பல் உள்ளூர் புள்ளிகளின் உதவியுடன், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மட்டுமின்றி தமிழக முழுவதும் பல்வேறு பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செயல்படாத ஏராளமான செல்போன் டவர்களை நுாதன முறையில் திருடியுள்ளது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் வாழப்பாடியில் பிடிபட்டுள்ள இந்த கும்பலிடம் உரிய விசாரணை நடத்தினால், தமிழகம் முழுவதும் நடைபெற்ற பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நூதன திருட்டு குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவருமென கூறப்படுகிறது.







