கல்லூரி முதல்வர்கள் மாணவர்களை சந்திக்க வேண்டும்- அமைச்சர் பொன்முடி

கல்லூரி முதல்வர்கள் வகுப்பறைக்கு செல்ல வேண்டும், மாணவர்களை சந்திக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். நான் முதல்வன் திட்டத்துக்கான செயல்முறைகள், பாடத்திட்டம், பயிற்சி ஆகியவற்றை புதிய இணையதளம் வாயிலாக மாணவர்கள் அறிய…

கல்லூரி முதல்வர்கள் வகுப்பறைக்கு செல்ல வேண்டும், மாணவர்களை சந்திக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

நான் முதல்வன் திட்டத்துக்கான செயல்முறைகள், பாடத்திட்டம், பயிற்சி ஆகியவற்றை புதிய இணையதளம் வாயிலாக மாணவர்கள் அறிய தமிழக அரசு புதிய முயற்சியை மேற்கொண்டு ஒரு இணையதளத்தை வடிவமைத்துள்ளது. இதற்கான இணையதளத்தை சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதில் அமைச்சர்கள் பொன்முடி, சி.வி.கணேசன், தலைமைச் செயலாளர் இறையன்பு, அதிகாரிகள் உதயச்சந்திரன், கார்த்திகேயன், இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரி முதல்வர்கள், ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி, தொழில் நிறுவன பிரதிநிதிகள், தொழில்முனைவோர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, முதலமைச்சர் உயர்கல்வித் துறையை பொற்காலமாக மாற்ற வேண்டும் என அறிவித்துள்ளார். அவ்வாறு நிச்சயமாக மாறும் என்பதற்கு உதாரணம் தான் நான் முதல்வன் திட்டம்.

கல்லூரி முதல்வர்கள் வகுப்பறைக்கு செல்ல வேண்டும். மாணவர்களை சந்திக்க வேண்டும். துணைவேந்தர்களும் மாதத்திற்கு ஒருமுறையாவது வகுப்பறைக்கு சென்று வர வேண்டும். மாணவர்களின் மனநிலையை அறிந்து கொள்ள இது ஏதுவாக இருக்கும். பல்வேறு துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டிய திட்டம் தான் நான்
முதல்வன் திட்டம். அதுதான் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தந்த பாடத்திற்கு ஏற்ப அவர்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ள திறன் மேம்பாட்டு அவசியம். மாணவர்களை நான் முதல்வனாக வேண்டிய கடமையும், பொறுப்பும் முதல்வருக்கும், துணை வேந்தர்களுக்கும் உள்ளது. போட்டித் தேர்விற்கு படிக்கும் போதே மாணவர்களை தயார்ப்படுத்த வேண்டும். மொழி உணர்வும் வேண்டும் என்ற உணர்வோடு, பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கும் தமிழ் பாடமாக கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகங்களிலும் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அனைவருக்கும் கல்வி என மாற்றுவது தான் திராவிட மாடல் என்ற அடிப்படையில் முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.