மயிலாடுதுறை அருகே செல்போன் டவர் மீது ஏறி தலை கீழாக நின்று இளைஞர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, இலுப்பூர் ஊராட்சியில் குளம், குட்டை, வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை மீட்டுத் தர கோரி செல்போன் டவர் மீது ஏறி தலைகீழாக நின்று இளைஞர் கதிரவன் என்பவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆக்கிரமிப்பு தொடர்பாக தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் என பல்வேறு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
செல்போன் டவரில் ஏறி தலை கீழாக நின்று கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மனுவிற்கு மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, பொறையார் போலீஸார் இளைஞர் கதிரவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, இளைஞருக்கு ஆதரவாக அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








