மலையடிவார வீடுகளில் இருந்து மூன்று நாட்டுத் துப்பாக்கிகள், 78 தோட்டாக்கள் பறிமுதல்… மூவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை… எங்கு நடந்தது இந்த சம்பவம்…? துப்பாக்கிகள் வைத்திருந்ததன் காரணம் என்ன…? செய்தித் தொகுப்பில் காணலாம்…
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. இங்கு விவசாய நிலங்கள் ஏராளம் என்பதால், விவசாயத்தையே இப்பகுதி மக்கள் பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மேகமலை புலிகள் மற்றும் சாம்பல் நிற அணில்களின் சரணாலயமாகவும் இருந்து வருகிறது. இதன் காரணமாக இங்கு சுற்றித் திரியும் வனவிலங்குகள் அவ்வப்போது விவசாய நிலங்களை சூரையாடி பயிர்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் அதிகம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் மக்கள் தங்கள் நிலங்களைச் சுற்றி மின்வேலி உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். ஒருசிலர் சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கிகளை பயன்படுத்தி அந்த வனவிலங்குகளை வேட்டையாடியும் வருவதால், அவர்கள் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேபோல வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த இருவர் தங்கள் வீடுகளில் நாட்டுத் துப்பாக்கிகளை பதுக்கி வைத்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடம் சென்ற வத்திராயிருப்பு போலீசார், அப்பகுதியில் உள்ள சரவண குமார் மற்றும் வனராஜா ஆகியோர் வீடுகளில் சோதனையிட்டனர். சோதனையில் சரவண குமார் வீட்டில் இருந்து இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் 78 தோட்டாக்களும், வனராஜா வீட்டில் இருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கியும் கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த சரவண குமார், வனராஜா மற்றும் அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட நிகில் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதையும் படியுங்கள் : பட்டத்தை பிடிக்கச் சென்ற சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு – உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்!!
கைது செய்யப்பட்டவர்களிடம் நாட்டுத் துப்பாக்கிகள் என்னென்ன காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சரவண குமார் மீது 2019 ஆம் ஆண்டும் துப்பாக்கி வைத்திருந்ததாக ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னும் இப்பகுதிகளில் நாட்டுத் துப்பாக்கிகள், நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தாலும், அதிகப்படியான தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என போலீசார் தகவல் தெரிவித்தனர்.