மேட்டுப்பாளையம் அருகே அணை கட்டி பழங்குடியின மாணவர்களுக்குக் கல்வி உதவி பொருட்கள் வழங்க வந்தவர்களுக்குப் பறை இசைத்து நன்றி தெரிவித்த பழங்குடியின மாணவர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆணைகட்டி பகுதியில் உள்ள கொண்டனூரில் பழங்குடியின அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில், இங்கு படிக்கும் மாணவர்களின் கல்வி தேவைகளை அறிந்து அதனைப் பூர்த்தி செய்யும் விதமாக ஆதி கூட்டமைப்பு மற்றும் சக்தி அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சக்தி அறக்கட்டளை நிறுவனர் மிருதுள தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடுநிலை பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குக் கல்வி உதவியாக இலவச புத்தக பைகள், நோட்டுகள், புத்தகங்கள், பென்சில், பேனா உள்ளிட்ட பொருட்கள் 110 மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
முன்னதாக, பள்ளி மாணவர்களுக்குக் கல்வி உதவிகளை வழங்க வந்தவர்களை வரவேற்கும் விதமாக, அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஒன்று கூடி தங்களது பறை இசை கருவிகளைக் கொண்டு பறை இசைத்து உற்சாக வரவேற்பு அளித்து, தங்களுக்கு கல்வி உதவி பொருட்கள் கொண்டு வந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும் மாணவிகள் காட்டின் அவசியம் மற்றும் அதில் உள்ள இயற்கை வளம் குறித்து தங்களது பூர்வகுடி மக்களின் பழங்குடியின பாடல்களைப் பாடியும் வரவேற்பு கொடுத்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. நிகழ்ச்சியில் பேசிய கல்வி உதவியாளர்கள் மாணவர்களுக்குப் பல்வேறு தன்னம்பிக்கை கதைகளைக் கூறி அவர்களுக்குக் கல்வியின் அவசியம் குறித்து விளக்கிப் பேசினர்
சௌம்யா.மோ







