தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ரூ. 90 கோடியில் பாசன ஆறுகள் தூர்வாரும் பணிகள் வரும் 10 ஆம் தேதிக்குள் நிறைவு பெறும் என பணிகளை ஆய்வு செய்த நீர் வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் தெரிவித்துள்ளார்.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை வரும் 12 ம்
தேதி திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் இம்மாவட்டங்களில் ஆறுகள், பாசன வாய்க்கால்கள், வடிகால்கள் ரூ.90 கோடியில் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று நிறைவு பெறவுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் ரூ.20 கோடி செலவில் 189
பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவு பெறும் நிலையை எட்டியுள்ளது.
கல்லணையில் மதகுகள் சீரமைக்கும் பணி, கல்லணை – தோகூரை இணைக்கும் புதிய பாலம் கட்டுமானப் பணிகள், கரைகள் பலப்படுத்தும் பணி, தரைத்தளம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
முதல்வர் 9 ம் தேதி தஞ்சை மற்றும் திருச்சியில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்து, 12 ம் தேதி மேட்டூர் அணையை திறக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும், முழுமையாக
தூர்வாரப்பட்டு கடைமடை வரை தங்குதடையின்றி தண்ணீர் சென்றடையும் இவ்வாண்டு விவசாயிகள் மூன்று போக சாகுபடியிலும் மகிழ்ச்சியாக ஈடுபடலாம். அனைத்து பணிகளும் 10 ம் தேதி நிறைவு பெறும். தென்மேற்கு பருவ மழை 8 ம் தேதி துவங்க உள்ளதால் மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
ம. ஶ்ரீ மரகதம்







