திருப்பூர் மாவட்டத்தில் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே பயணிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக கவிழ்ந்ததில் சரோஜா, பூங்கொடி, கிட்டுசாமி மற்றும் தமிழரசி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் பலியான நான்கு பேரின் குடும்பத்தினருக்கும் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டத்தில், சாலை விபத்தில் நான்கு பேர் பலியான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்ததாக தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனை உடனடியாக விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆறுதல் கூறி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திட அனுப்பி வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் :பரங்கிமலை ரயில் நிலையத்தில் கொலையான மாணவி சத்யாவின் தாய் மரணம்!
மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பழனி, வளர்மதி, இந்துமதி, மற்றும் காயத்ரி ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.








