ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள தாலிபான் அரசு அந்நாட்டில் இரண்டு கோடியே 3 லட்சம் இணையதளங்களை தடை செய்துள்ளதாக அந்நாட்டின் தகவல் தொடர்புதுறை அமைச்சர் நஜிபுல்லா ஹஹானி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், தாலிபான் கொள்கைகளுக்கு எதிராக அந்த இணையதளங்கள் உள்ளதால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், பேஸ் புக் இணையதளமும் தங்களது கொள்கைக்கு எதிராக செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து முழுவதுமாக வெளியேறிய அமெரிக்க அரசு உதவியுடன் அங்கிருந்த அரசு தாலிபான் தீவிரவாதிகளின் முழு கட்டுப்பாட்டிற்கு சென்றுவிட்டது. இப்போது அங்கு தாலிபான் தீவிரவாத இடைக்கால அரசை அமைத்துள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதி முதல், அங்கு தாலிபான் தீவிரவாதிகள் அரசு அமைந்தது. அதன் பின்னர் அந்நாட்டின் பொருளாதாரம் முழுவதுமாக முடங்கி விட்டது. உணவு பஞ்சமும் தலைதூக்கி ஆடுகிறது.
அந்நாட்டில் இருந்து வெளியேறவே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். மனித உரிமைகளை காலில்போட்டு மிதிக்கிறது தாலிபான் அரசு. பெண்களின் சுதந்திரம் முழுமையாக பறிக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டில் தாலிபான் தீவிரவாத கொள்கைகளுக்கு எதிராக செயல்படுவதாக கூறி பல மீடியா நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அந்நாட்டில் உள்ள பத்திரிக்கையாளர்களுக்கு எவ்வித சுதந்திரமும் இல்லை. அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.
அங்குள்ள மீடியா நிறுவனங்களில் பணியாற்றி வந்த 45 சதவீத பத்திரிக்கையாளர்கள் தங்களது தொழிலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளனர். அவர்கள் தற்போது மாற்றுத்தொழிலை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இந்த நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாட்டு சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பத்திரிக்கையாளர்கள் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், அவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் எனவும் ஐநா சபை கருத்து தெரிவித்துள்ளது. ஆனால் தாலிபான் அரசோ அதனை கண்டு கொண்டதாக தெரியவில்லை.
இராமானுஜம்.கி








