கேரள குண்டு வெடிப்பு சம்பவம்: 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி- சுகாதாரத்துறை அமைச்சர்!

களமசேரி குண்டு வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரி பகுதியில் கிறிஸ்தவ…

களமசேரி குண்டு வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சுமார் 2000 பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியானது.

குண்டு வெடித்த பின்பு, தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது. தகவலறிந்த பின், தீயணைப்பு மீட்புக் குழுவினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர். விசாரணையில், களமசேரியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் IED(Improvised Explosive Device) ரக குண்டு பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு டிபன் பாக்ஸில் IED வைத்திருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன என கேரள டிஜிபி தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து விசாரிக்க 8 பேர் கொண்ட தேசிய பாதுகாப்புப் படை கேரளத்துக்கு விரைந்துள்ளது. இது மிகவும் துரதிருஷ்டவசமான சம்பவம். சம்பவம் தொடர்பான விவரங்களை சேகரித்து வருகிறோம். அனைத்து உயர் அதிகாரிகளும் எர்ணாகுளத்தில் உள்ளனர். நாங்கள் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். விசாரணைக்கு பிறகே கூடுதல் விவரங்ள் தெரிய வரும் இவ்வாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

கேரளாவில் உள்ள ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்பட மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் அனைத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டுள்ளது. இதனால் விசாரணை மேலும் தீவிரம் அடைந்துள்ளது. கேரள மாநிலம் களமசேரியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் கொச்சியை சேர்ந்த டோமினிக் மார்ட்டின் என்பவர் தான்தான் குற்றம் செய்ததாக  ஒப்பு கொண்டு கொடகரை காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார். 

இந்நிலையில் களமசேரி குண்டு வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “52 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அந்த 6 பேரில் ஒருவர் 12 வயது குழந்தை. காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் உள்ளனர். பலியான நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.