இந்தியா செய்திகள்

இறந்து போன தாய் அருகே இரண்டு நாட்களாகப் பட்டினி கிடந்த 18 மாதக் குழந்தை!

மகாராஷ்டிர மாநிலத்தில் இறந்து போன தாயின் அருகே இரண்டு நாட்களாக யாரும் பார்க்காத நிலையில் பட்டினி கிடந்த பச்சிளம் குழந்தை போலீசாரால் மீட்டெடுப்பு.

மகாராஷ்டிர மாநிலம் பூனேவில் வீட்டிற்குள் பெண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். அப்பெண்ணின் உடலுக்கு அருகில் அவரது 18 மாதக் குழந்தையும் இரண்டு நாட்களாகப் பட்டினியாகக் கிடந்துள்ளது. அப்பெண் இறந்த தகவல் தெரிந்தும் அக்கம் பக்கத்தினர் கொரோனா நோய்த்தொற்றின் அச்சத்தால் அக்குழந்தைக்கு உதவ முன்வரவில்லை. பின்பு இரண்டு நாட்கள் கழித்து இறந்த அப்பெண்ணின் உடலில் துர்நாற்றம் வீசத் தொடங்கவே அந்த வீட்டின் உரிமையாளர் பூனேவின் பிம்ப்ரி சின்ச்வாட் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பென்ணின் குழந்தையைக் கூட தூக்க அக்கம் பக்கத்தினர் கொரோனா அச்சத்தால் முன்வரவில்லை. பின்பு பெண் காவலர்களான சுசிலா கபாலே மற்றும் ரேகா அக்குழந்தைக்கு உணவளித்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து அந்தப் பெண் காவலர் சுசிலா கபாலே கூறியதாவது, “எனக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அச்சிறுகுழந்தையை நான் என் சொந்த குழந்தை போல் உணர்ந்தேன். அவன் பாலை வேகமாகப் பருகியதில் அவன் இரண்டு நாட்களாகத் தண்ணீர் கூட அருந்தவில்லை எனப் புரிந்து கொண்டேன்” என்றார். மேலும் அவருடன் பணி புரியும் காவலர் ரேகா கூறுகையில், “குழந்தை இவ்விரண்டு நாட்கள் உணவின்றி தாக்குப்பிடித்தது வெகு ஆச்சரியமாக உள்ளது. மேலும் லேசான காய்ச்சலைத் தவிர அவன் நலமாக உள்ளான்” என்றார்.

மேலும் விசாரணையில் அந்தப் பெண்ணின் கணவர் வேலைக்காக உத்தரப்பிரதேசம் சென்றிருப்பதாகவும் அவர் விரைவில் சொந்த ஊர் திரும்ப அனைவரும் காத்திருப்பதாகவும் காவல்துறை அதிகாரி பிரகாஷ் ஜாதவ் தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

Saravana Kumar

நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 29-ம் தொடக்கம்; மக்களவை செயலகம் அறிவிப்பு!

Saravana

இந்தியாவில் சற்று அதிகரித்த கொரோனா தொற்று

Halley Karthik