ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக 1,213 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகை அக்டோபர் 23 மற்றும் 24-ம் தேதிகளில் கொண்டாடப்பட்டது. பண்டிகை நாட்கள் என்பதாலும், தொடர் விடுமுறை என்பதாலும், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் சென்றிருந்தனர்.
இந்நிலையில் தொடர் விடுமுறை முடிந்து பல்வேறு ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக இன்று(அக். 24), தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், கூடுதலாக 1,213 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 3,313 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
பிற முக்கிய நகரங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக 1,846 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் பொதுமக்களின் வசதிக்காக தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதையும் படியுங்கள் : வரலாற்றை அழிக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி..! – வைகோ சாடல்
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் சிவசங்கர், பயணிகள் அரசு ஏற்படுத்தித் தந்துள்ள வசதிகளை பயன்படுத்தி, தங்களது பயணத்தினை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.







