“ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்… நடவடிக்கை எடுக்க தவறியதன் விளைவுதான் இது” – இபிஎஸ் கண்டனம்!

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சமீப காலமாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற குற்றச் சம்பவங்களின் ஈடுபடுபவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். இருப்பினும் இக்குற்ற சம்பவத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

“தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வருகின்றன. சங்க காலம் முதலே பெண் இனத்தை போற்றிப் பாதுகாத்து வந்த தமிழக வரலாற்றில், இது போன்ற கருப்பு நாட்கள் தொடர்கதையாவது மிகவும் வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியதாகும். பயங்கரவாதிகள் ஆட்சி நடக்கும் நாடுகளில் கூட இத்தகைய கொடூரம் நடந்ததில்லை என எண்ணும் அளவு இந்த ஆட்சியில் நடந்து வருகிறது.

இந்த அரசு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சம்பவங்களை உரிய முறையில் தடுக்காமல், பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தவறியதால், இத்தகைய கொடூரங்கள் தினந்தோறும் நிகழ்கின்றன. இந்த ஆட்சியில் தமிழ்நாடு இப்படி சிக்கிச் சீரழிந்து வருவது குறித்து எந்தக் கவலையுமில்லாமல் ‘பெண்களுக்கு பாதுகாப்பு’ என பேசினால் மட்டும் போதுமா? இந்த ஆட்சி நீடித்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு அச்சுறுத்தலான நிலைதான் தொடர்கிறது, இனியாவது பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்துகிறேன்”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.