குழந்தை பெற்றெடுத்த 11-ம் வகுப்பு மாணவி – இன்ஸ்டாகிராமில் பழகிய ஆண் நண்பர் கைது

மதுரை அருகே 11-ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்ற சம்பவத்தில், அதற்கு காரணமான திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.   மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17…

மதுரை அருகே 11-ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்ற சம்பவத்தில், அதற்கு காரணமான திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

 

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளை கவனிப்பதற்காக அவரது பெற்றோர் மாணவிக்கு செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால் சிறுமி இன்ஸ்டாகிராம் மற்றும் ஆன்லைனில் கேம் விளையாடுவதற்கும் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார்.

 

அப்போது, சிறுமிக்கும், அவரது உறவினரான திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது காதலாக மாறியது. சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த இளைஞர் தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்தார்.

இதனை பெற்றோரிடம் கூறாமல் மறைத்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 22ம் தேதி வீட்டின் கழிப்பறைக்கு சென்ற சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு சிறுமியின் பெற்றோர் வந்து பார்த்துள்ளனர். அப்போது கழிவறையில் சிறுமி குழந்தையுடன் மயங்கி கிடந்துள்ளார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் இருவரையும் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

இது பற்றிய தகவல் அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட தவறான பழக்கத்தால், 17 வயது சிறுமி குழந்தை பெற்று எடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.