2024ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக
டி.டி.வி.தினகரன் மன்னார்குடியில் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே ராதாநரசிம்மபுரம் கிராமத்தில் அமமுக
பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல்
ஆலோசகர் மறைந்த ராவணன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர்,
செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி.தினகரன் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணியில் சிறு அணில்போல் செயல்படும். அ.ம.மு.க கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் எனத் தெரிவித்தார்.
அ.தி.மு.க.வினர் தன்னோடு பேசுவதை அரசியலாகப் பார்க்க வேண்டாம். அரசியல் என்பது வேறு பழக்கவழக்கம் என்பது வேறு. இரண்டையும் குழப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்ட தினகரன் ஓ.பி.எஸ். உடன் பேசி பல வருடங்கள் ஆவதாகத் தெரிவித்தார். திமுக தமிழை வைத்தும், வார்த்தை ஜாலத்தாலும் மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்தும் கட்சி. கடந்த 10 ஆண்டுகளாக ஜெயலலிதா கையில் மக்கள் ஆட்சியை ஒப்படைத்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் திருவிளையாடல்களால் தற்போது திமுக மீண்டும் ஆட்சி செய்து வருவதாக டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
எம்.ஜி.ஆர். 1989இல் இறந்த பிறகும், பொய் பிரசாரத்தால் 1996ஆம் ஆண்டு
ஜெயலலிதா மீது குற்றம் சாட்டியும் திமுக ஆட்சிக்கு வந்தது. பின்னர், 2006ஆம்
ஆண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என திமுக ஆட்சிக்கு வந்தது. தற்போது கலைஞர்
கருணாநிதியைப் போல் பொய்யான வாக்குறுதியை கூறி ஸ்டாலின் ஆட்சிக்கு வந்துள்ளதாக தினகரன் தெரிவித்தார்.
NIA சோதனை நடத்துவது, இந்திய இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கைகள், ஆயுதங்களை கையகப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளைப் பார்க்கும்போது
தமிழகத்தில் 2024ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருக்கிறது என்றார்.








