புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள்: இபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்து

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மாபெரும் இந்த தலைவரின் பிறந்த நாளில் அன்னாரது வழியில் ஒற்றுமையாய் செயல்படுவோம் என ஓபிஎஸ்…

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மாபெரும் இந்த தலைவரின் பிறந்த நாளில் அன்னாரது வழியில் ஒற்றுமையாய் செயல்படுவோம் என ஓபிஎஸ் கெட்கொண்டுள்ளார்.

சரித்திர திட்டங்கள் மூலம் தமிழகத்தின் தலையெழுத்தை சீரமைத்த அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதையொட்டி அதிமுக அலுவலகம் வண்ண விளக்குகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் ஆகச்சிறந்த மக்கள் கழகத்தினை நிறுவிய புரட்சித்தலைவரின் 106-வது பிறந்த நாளில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் ட்விட்டரில் மூலமாக தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இதில் முதலாவதாக தற்போது அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமாக செயல்பட்டுவரும், எடப்பாடி பழனிச்சாமி புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாளான இன்று அவரது பெரும் புகழையும் பெருமையையும் போற்றி வணங்குவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள ட்விட்டேர் பதிவில்,

கலங்கரை விளக்கமாக இருந்து தமிழகத்தை கரை சேர்த்த காவியத் தலைவர், சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகர், வாழ்வு தந்த வள்ளல், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழையும் பெருமையையும் போற்றி வணங்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.

இவரைத்தொடர்ந்து, அன்னாரது வழியில் ஒற்றுமையாய் செயல்படுவோம் என தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,

தனது கடும் உழைப்பாலும், விடா முயற்சியாலும் வானளவு உயர்ந்து, நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து, பொதுவாழ்க்கையில் முதலமைச்சராக பல சரித்திர திட்டங்களை நிறைவேற்றி, மக்கள் மனதில் நீங்காது வாழும் புரட்சித்தலைவர் #MGR அவர்களின் 106-வது பிறந்தநாளில் அன்னாரது வழியில் ஒற்றுமையாய் செயல்படுவோம்! என ஓபிஎஸ் கெட்கொண்டுள்ளார்.

 

இதேபோல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை கிண்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள எம் ஜி ஆரின் சிலைக்கு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் செந்தில்குமார், செய்தித்துறை செயலாளர் செல்வராஜ், செய்தித்துறை இயக்குனர் ஜெயசீலன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.