விசைத்தறிக்கு இலவசமாக வழங்கிய 750 யூனிட் மின்சாரத்தை ஆயிரம் யூனிட்களாக உயர்த்தியதற்கு தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் பிரதிநிதிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் வேலுச்சாமி, விசைத்தறிகளுக்கு 750 யூனிட்டில் இருந்து ஆயிரம் யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்புக்கும், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வில் இருந்து 50 சதவீதம் குறைப்பு என்ற அறிவிப்புக்கும் முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததாக கூறினார்.
மேலும், இந்த அறிவிப்புகளுக்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து வரும் சனிக்கிழமை (மார்ச் 11) அன்று, கோவை கருமத்தம்பட்டியில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது என்றும் தெரிவித்தனர். இதில் 25,000-க்கும் மேற்பட்ட விசைத்தறி நெசவாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
நெசவாளர்களுக்கு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, இந்த திராவிட மாடல் அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், எனவே இன்று முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்து, விழா அழைப்பிதழையும் வழங்கியதாக தெரிவித்தனர். இதற்கு நேரில் கலந்து கொள்வதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளதாவும், அமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளதாகவும் அவர் கூறினார்.







