ஆசிரமத்தில் தஞ்சமடைந்த வாலிபரை, அவரது பெற்றோருடன் அனுப்பி வைப்பதற்காக பெண் சாமியார் மற்றும் ஆசிரம ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கட்டாகாரம் பகுதியில், “கட்டாகாரம் அம்மா” என்ற பெயரில் பெண் சாமியார் கீதா, ஓம்சக்தி கோயில் மற்றும் ஆசிரமம் வைத்து நடத்தி வந்தார். மகாராஜாக்கடை பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்பவரது மகன் பார்த்திபன், தனது வீட்டைவிட்டு வெளியேறி பெண் சாமியார் கீதா நடத்தி வந்த ஆசிரமத்தில் தஞ்சமடைந்ததாக தெரிகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மகனை காணவில்லை என பல இடங்களில் தேடிய பெற்றோர், மகன் ஆசிரமத்தில் இருப்பதை உறவினர் மூலம் அறிந்தனர். கட்டாகாரம் அம்மா ஆசிரமத்திற்கு சென்ற பார்த்திபனின் பெற்றோர், மகனை தங்களுடன் அனுப்பி வைக்குமாறு பெண் சாமியார் கீதாவிடம் கேட்டனர். அப்போது அதற்கு சம்மதித்து பார்த்திபனை பெற்றோருடன் அனுப்பிய கீதா, பின்னர் அவரை செல்போனில் தொடர்புகொண்டு மீண்டும் அழைத்து ஆசிரமத்திலேயே தங்கவைத்தாக கூறப்படுகிறது.
பெற்றோர் மீண்டும் சென்று ஆசிரமத்தில் முறையிட்ட போது, பார்த்திபன் அவராகத்தான் ஆசிரமத்திற்கு வந்து அம்மனுக்கு ஊழியம் செய்ய விரும்புவதாக பெற்றோரிடம் கூறியுள்ளார் பெண் சாமியார் கீதா. அதோடு அவராக வந்தால் மட்டும் அழைத்துச் செல்லுங்கள், இல்லையென்றால் பார்த்திபனை இங்கேயே விட்டுச் செல்லுங்கள் என கடுத்த குரலில் பெண் சாமியார் கீதா பேசியதாக கூறப்படுகிறது.
இனி பேசி பயனில்லை என்று அறிந்த பார்த்திபனின் தந்தை குப்புசாமி போச்சம்பள்ளி காவல் நிலையத்தில், தனது மகனை ஆசிரமத்தாரிடம் இருந்து மீட்டுத்தரக்கோரி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போச்சம்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் குமார், பெண் சாமியார் கீதாவை சமரச பேச்சுவார்த்தைக்காக காவல் நிலையம் வருமாறு அழைத்தார்.
காவல் நிலையம் வெளியே பெண் சாமியார் கீதாவுடன் ஆசிரம ஊழியர்கள் சிலரும் கூட, புகார்தாரரான குப்புசாமி தரப்பிலும் பேச்சுவார்த்தைக்காக சிலர் வந்தனர். காவல் உதவி ஆய்வாளர் குமார் இருதரப்பினரிடமும் பேசிக்கொண்டிருக்கும்போது, ஆசிரம ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளானது. அப்போது ஆசிரம ஊழியர்களுள் ஒருவரான வேல்முருகன், காவல் உதவி ஆய்வாளர் குமாரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதேபோல இருதரப்புக்கும் கைகலப்பானதில், குப்புசாமி தரப்பில் பேச்சுவார்த்தைக்காக வந்த பூபாலன் என்பவரை பெண் சாமியார் கீதா தாக்கினார். காவல் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்டதால், அங்கு ஓடிவந்த சக காவலர் உதவி ஆய்வாளர் குமாரை தாக்கிய வேல்முருகனை அவருடன் சேர்ந்து தரதரவென இழுத்து காவல் நிலையத்திற்குள் கொண்டு சென்றனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக பெண் சாமியார் கீதா மற்றும் வேல்முருகன் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டி இருவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு வெளியே அழைத்து வந்தனர். அப்போது அங்கு கூடிய இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் பெண் சாமியார் உள்ளிட்ட இருவரின் கைதை கண்டித்து, போலீசாரின் வாகனத்தை முற்றுகையிட்டு பிரச்னையில் ஈடுபட்டதால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் போலீஸ் உயர் அதிகாரிகள் தலையீட்டால் இந்து மக்கள் கட்சியினர், முற்றுகையை கை விட்டு விலகிய நிலையில் பெண் சாமியார் கீதா உட்பட இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட பெண் சாமியார், ஏற்கனவே இளைஞருடன் சேர்ந்து முத்தம் கொடுத்தபடி “இன்ஸ்டா ரீல்ஸ்” வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். அதன் தொடர்ச்சியாக காவல் உதவி ஆய்வாளர் மற்றும் பொதுமக்களில் ஒருவரை தாக்கிய வழக்கிலும் பெண் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா