உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரக்‌ஷாபந்தனை முன்னிட்டு ரூ.200 குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது. விறகு அடுப்புக்கு பதிலாக எரிவாயு உருளைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் பிரதமர்…

உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரக்‌ஷாபந்தனை முன்னிட்டு ரூ.200 குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது.

விறகு அடுப்புக்கு பதிலாக எரிவாயு உருளைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் கீழ், 2016-ம் ஆண்டு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரத்தின்படி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அந்த வகையில், எண்ணெய் நிறுவனங்கள் மாதத்திற்கு இரண்டு முறை சமையல் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. வீட்டு உபயோக சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், ஒரு சிலிண்டர் ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனையானது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிய நிலையில் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனைதொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி அனைத்து நுகர்வோருக்கும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மத்திய அரசு ரூ.200 குறைத்தது. இந்நிலையில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்தை மத்திய அரசு 100 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி, இனி ஒரு எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்து பெறும்போது, மானியத் தொகை 200க்கு பதிலாக 300 ரூபாய் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/ianuragthakur/status/1709534548231655634

உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் வாங்குவோருக்கான மானியத்தை அதிகரித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவிப்பினை வெளியிட்டார். இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்களுக்கு நிம்மதி கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.