நடிகர் சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள தோழர் சேகுவேரா படத்தின் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்த காலத்தில் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் சத்யராஜ். 90களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகன், வில்லன், குணசித்திரம், நகைச்சுவை என ஏராளமானப் படங்களில் நடித்துள்ளார்.
அவரது நடிப்பில் வெளியான நூறாவது நாள், மிஸ்டர் பாரத், வால்டர் வெற்றி வேல் உள்ளிட்ட படங்கள் அந்த காலக்கட்டத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இதனைத் தொடர்ந்து பல படங்களில் அவர் கதாநாயகனாக நடித்தார். அவர் கதாநாயகனாக நடித்து நகைச்சுவை நடிகராக கவுண்டமணி நடித்து படங்கள் பல வெற்றி பெற்றன.
இதனைத் தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் அவர் குணச்சித்திர நடிகராக நடிக்கத் தொடங்கினார். இந்த நிலையில்தான் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட பாகுபலி படத்தில் கட்டப்பா கதாபாத்திரம் இந்திய அளவில் அவருக்கு புகழைத் தேடித் தந்தது.
இவர் சமீபத்தில் வசந்த் ரவியுடன் வெப்பன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் ஜாக்சன் துரை 2 படத்தில் பிரிட்டிஷ் அதிகாரியாக சத்யராஜ் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அலெக்ஸ் இயக்கும் தோழர் சேகுவேரா படத்தில் சத்யராஜ் நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிஎஸ் அஸ்வின் இசையமைத்திருக்கும் இப்படத்தை அனிஷ் எட்மண்ட் பிரபு தயாரித்துள்ளார். இந்த நிலையில், இப்படத்தின் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.







