தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்தும் வகையில், விமானம் மூலம் ஒரு லட்சத்து 66 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.
தமிழகத்தில் கொரோனா பரவல் 2 வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தொற்று காரணமாக மாநிலம் முழுவதும், தினமும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர், பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று மட்டும் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் கிடைக்காமல் பல நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்திற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
விமானம் மூலம் ஒரு லட்சத்து 66 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளன. இதுதவிர மேலும் 5 லட்சத்து 80 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் இன்று மாலை சென்னை கொண்டு வரப்பட உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.







