ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் சற்று நேரத்தில் ஆஜராகிறேன்! – மன்சூர் அலிகான்

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஆஜராகிறேன் என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்தார். நடிகை த்ரிஷா மற்றும் நடிகை மடோனா செபாஸ்டின் குறித்து நடிகர் மன்சூர் அலிகான்…

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஆஜராகிறேன் என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்தார்.

நடிகை த்ரிஷா மற்றும் நடிகை மடோனா செபாஸ்டின் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலானது.  இதைத் தொடர்ந்து நடிகை த்ரிஷா,  மன்சூர் அலிகான் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்தார்.  இது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பாகியது.

இதையடுத்து,  நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவாக நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு மற்றும் நடிகை,  நடிகர்கள் சமூக வலைதளங்களில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராகவும்,  நடிகை திரிஷாவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில்,  நடிகர் மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தது. 

இதனைத்தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் IPC 509 – பெண்ணின் நாகரிகத்தை அவமதிக்கும் செயல் செய்தல்,  IPC 354(A) – பெண்ணின் அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

உடல் நிலை பாதிப்பால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்று நடிகர் மன்சூர் அலிகான் ஆயிரம் விளக்கு மகளிர் போலீசாருக்கு கடிதம் எழுதி உள்ளார். நாளை ஆஜராவேன் என முதலில் தெரிவித்திருந்த நிலையில்,  இன்றே ஆஜராகப் போவதாக அவர் தற்போது தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், இன்று (நவ.23) மதியம் 2.30 மணிக்கு ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஆஜராகிறேன் என தெரிவித்தார். மேலும், எனது முன் ஜாமீன் மனுவை வாபஸ் வாங்கி விட்தாக மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.