அரசியலில் ஆகாதவர்களை தீர்த்து கட்டும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். அவரின் இல்லம், தலைமை செயலகத்தில் உள்ள அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. நேற்று இரவும் சோதனை தொடர்ந்த நிலையில், பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தொலைபேசி வழியாக பிரத்யேக பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது: “புயல்வேகத்தில் கடமையாற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி. திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கோடு நடு இரவில் கைது செய்து மன உளைச்சல் ஏற்படுத்தியுள்ளனர். அதிகாரத்தில் திமிரில் அடாவடிதனத்தை அரங்கேற்றியுள்ளது பாஜக அரசு.
அரசியலில் ஆகாதவர்களை தீர்த்து கட்ட அமலாக்கத்துறையையும், சிபிஐயை ஏவி விடுவது மோடி அரசு வழக்கமாக கையாளும் முறை. தலைமை செயலாளர் அனுமதி பெறாமல் நேற்று கோட்டைக்குள் சென்று சோதனை நடத்தியுள்ளனர். எந்த விசாரணையும் சந்திக்க தயார் என்று சொன்ன அமைச்சரை துணிச்சலாக இருக்கிறாரே என்ற ஆத்திரத்தில் கைது செய்துள்ளனர்” என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.







