அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜியின் அரசியல் பின்புலத்தையும், அவர் கடந்து வந்த பாதையும் தற்போது காணலாம்.
கரூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து 2006-ம் ஆண்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு முதன்முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார் செந்தில் பாலாஜி. மீண்டும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற அவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவி வழங்கினார் ஜெயலலிதா.
போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது புகார் தெரிவிக்கபட்டது. ஜெயலலிதா அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி பின்னர் சரிவை சந்திக்கத் தொடங்கினார்.
2015-ம் ஆண்டு அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து ஜெயலலிதாவால் செந்தில் பாலாஜி நீக்கப்பட்டார்.
2016 சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி போட்டியிட்டார். அப்போது அதிக அளவு பணப்பட்டுவாடா பிரச்னையால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு டிடிவி தினகரன் அணியில் இருந்த செந்தில்பாலாஜியின் பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து டிடிவி தினகரனோடு ஏற்பட்ட அதிருப்தி மற்றும் தனது அடுத்தகட்ட அரசியல் வாழ்க்கையை கருத்தில் கொண்டு தனது ஆதரவாளர்களோடு திமுகவில் இணைந்தார்.
பணப்பட்டுவாடா பிரச்னையால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்ட அரவக்குறிச்சியில் 2019-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார் செந்தில்பாலாஜி.
தொடர்ந்து 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் வெற்றி பெற்ற செந்தில்பாலாஜி, திமுக அரசில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சரானார்.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கமான செந்தில்பாலாஜி மீது பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. மதுபானங்களுக்கு முறையான வரி செலுத்தாமல் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக தற்போது சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை மேற்கொண்டு அவரை கைது செய்துள்ளனர்.







