கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து கேரளாவில் வரும் 8 ஆம் தேதியில் இருந்து 16 ஆம் தேதி முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் புதிதாக 4,12,262 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்து 410 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் நாட்டில் நேற்று 3,980 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,30,168 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா உள்பட பல மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இதனால், மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இருந்தும் இந்த தொற்று அதிகமானோரை பாதித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் வரும் 8 ஆம் தேதி காலை 6 மணி முதல் 16 ஆம் தேதி இரவு 9 மணி வரை முழு ஊரடங்குக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒரு நாள் கொரோனா பாதிப்பு, 41 ஆயிரத்து 953 ஆக அதிகரித்ததை அடுத்து, இந்த ஊரடங்கு முடிவை கேரள முதல்வர் பினராயி விஜயன் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.







