தமிழக முதல்வராக நாளை பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அவருடைய சகோதரர் மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு தொலைப்பேசி வாயிலாக மு.க.அழகிரி பேசியதாவது, “தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அண்ணன் என்ற முறையில் தம்பிக்கு வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறேன். மு.க.ஸ்டாலினை பார்த்துபொருமைப்படுகிறேன். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கும் ஸ்டாலின் நல்லாட்சி தருவார். தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலினை நினைத்து பெருமைப்படுகிறேன்” என அவர் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதில் திமுக மட்டும் 125 இடங்களில் தனித்து வெற்றிபெற்றுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் ஆளும் கட்சியாக திமுக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை பொறுப்பேற்கவுள்ளார்.
திமுகவின் உட்கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதால் கடந்த 2014-ம் ஆண்டு மு.க.அழகிரி திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். திமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
இதனையடுத்து கட்சியின் நடவடிக்கைகளிலிருந்து அவர் விலகி இருந்தார். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை திமுக ஆட்சி அமைக்கவுள்ள நிலையில் மு.க.அழகிரி முதல்வராக பொறுப்பேற்கவுள்ள தன்னுடைய தம்பி மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.




