யூடியூபர் இர்பானின் கார் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் – ஓட்டுனர் கைது!

யூடியூபர் இர்பானின் கார் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவத்தில், ஓட்டுனர் அசாருதீனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூர் முல்லை நகரை சேர்ந்தவர் பத்மாவதி. 55 வயதான இவர்…

யூடியூபர் இர்பானின் கார் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவத்தில், ஓட்டுனர் அசாருதீனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூர் முல்லை நகரை சேர்ந்தவர் பத்மாவதி.
55 வயதான இவர் எஸ்.ஆர்.எம் கல்லூரியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று மாலை மறைமலை நகரில் உள்ள தனது மகளை பார்த்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மறைமலைநகர் முனிசிபாலிட்டி அலுவலகம் அருகே சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது செங்கல்பட்டில் இருந்து அதிவேகமாக சென்னை நோக்கி வந்த சொகுசு கார் ஒன்று மூதாட்டி பத்மாவதி மீது மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த சிட்டலப்பாக்கம் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய அசாருதீன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அசாருதீன் ஓட்டி வந்த கார் பிரபல யூடியூபர் இர்பானின் கார் என்பது தெரியவந்தது. பின்னர் இவ்விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் அசாருதீன் மீது, அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக அசாருதீனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.