திண்டிவனம் மரக்காணம் அருகே பட்டப்பகலில் உரக்கடை உரிமையாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதை அடுத்து வணிகர்கள் ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்து முருக்கேரி கிராமத்தை சேர்ந்தவர்
வைத்தியநாதன். இவர் அதே கிராமத்தில் உர வியாபாரம் செய்து வருகிறார்.நேற்று வழக்கம் போல் கடைக்கு சென்றபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்து வைத்தியநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த வைத்தியநாதனை மீட்டு அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து வந்த திண்டிவனம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் காந்தாடு கிராமத்தைச் சேர்ந்த அசோகன் என்பவர் நேற்று உரம் வாங்கிச் சென்றதாகவும் அது சம்பந்தமாக வைத்தியநாதனிடம் தகராறில் ஈடுபட்டு அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதும் தெரியவந்தது. இந்நிலையில் கடை உரிமையாளரை தாக்கியதை கண்டித்து சிறுவாடி – முருக்கேரி வணிகர்கள் இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.







