சீர்காழி அருகே பலசரக்கு கடையை சேதப்படுத்தி விட்டு வேனில் சென்ற இளைஞர்களை, பொதுமக்கள் திரைப்பட பாணியில் விரட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரியை சேர்ந்த 18 இளைஞர்கள், காரைக்காலில் நடந்த ஆணழகன் போட்டியில் பங்கேற்ற பிறகு, வேன் மூலம் புதுச்சேரி நோக்கி சென்றுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கருவிழுந்தநாதபுரம் பகுதிக்கு வந்தபோது, அங்குள்ள ஒரு கடையில் திராட்சைப்பழம் வாங்கியதாக தெரிகிறது.
விலை அதிகமாக இருப்பதாக கூறி கடை உரிமையாளரை தாக்கி விட்டு, கடையையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், அப்பகுதியில் இருந்த சிலர் மீதும் தாக்குதல் நடத்தி விட்டு சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு திரண்ட 50க்கும் மேற்பட்டோர், இருசக்கர வாகனங்கள் மூலம் திரைப்பட பாணியில் வேனை விரட்டி சென்றுள்ளனர்.
வேன் சீர்காழி அருகே வந்த போது, ஒரு ஆட்டோவின் பக்கவாட்டில் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. பொதுமக்கள் பின்தொடர்ந்து வருவதை அறிந்த ஓட்டுநர், சீர்காழி காவல்நிலையத்திற்குள் சென்று தஞ்சம் அடைந்தார். தொடர்ந்து, காவல்துறையினர் இளைஞர்களை பொதுமக்களிடம் இருந்து காப்பாற்றி ஓர் அறையில் அமரவைத்தனர். இச்சம்பவம் குறித்து செம்பனார்கோயில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.







