1லட்சத்து 20 ஆயிரம் அடி உயரத்தில் விண்வெளியில் மிதந்த உலகக் கோப்பை வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஐசிசி உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் போட்டிகள் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரானது வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும் என கிரிக்கெட் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி வந்தன.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பெங்களூர், சென்னை, டெல்லி, தர்மசாலா, குவாஹாட்டி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட், மும்பை ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
இந்த உலக கோப்பை போட்டியில் இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்று விட்டன. மீதமுள்ள இரண்டு இடங்களுக்கான, தகுதிச்சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை, மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன
ஒரு லட்சத்து 20 ஆயிரம் அடி உயரத்தில் விண்வெளியில் மிதந்த உலகக் கோப்பையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பிரபலப்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் இந்திய கிரிக்கெட் வாரியமும் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டன.
உலகக்கோப்பையை பிரத்யேகமான பலூனில் வைத்து அதை விண்வெளிக்கு அனுப்பின. அது பூமியில் இருந்து சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் அடி உயரத்தில் பூமியின் வளிமண்டலத்தின் விளிம்பில் நிலை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது.







