திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் இளைஞர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளளார்.
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்த தேர்தலில் அங்கு ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கவும், இழந்த ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் மார்க்சிஸ்ட் கட்சியும் உள்ளது. இந்த இருகட்சிகளுக்கும் இடையே அங்கு கடும் போட்டி நிலவுகிறது.
இதையும் படிக்கவும்: திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது
இங்கு 28 லட்சத்து 13 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த தேர்தலில் 259 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். அதிகபட்சமாக பா.ஜ.க. 12 பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் மாதம் 2ம் தேதி நடக்கிறது.
திரிபுரா தேர்தலையொட்டி இளைஞர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், திரிபுரா மக்கள் ஜனநாயகத்தின் திருவிழாவான தேர்தலில் அதிகளவில் வாக்களித்து சாதனை படைக்க வேண்டும். இந்த தேர்தலில் இளைஞர்கள் தங்களின் பங்களிப்பை அதிகளவில் அளிக்க வேண்டும் என்று அழைக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதே போல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பதிவில், வளர்ச்சிக்கான அரசாங்கம் அமைக்கப்படுவதையும், ஏற்கனவே திரிபுராவில் ஏற்பட்டுள்ள அமைதி மற்றும் முன்னேற்றம் தொடர்வதை உறுதி செய்ய மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். வெளியே வந்து வளமான திரிபுராவிற்கு வாக்களியுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.







