“கொடூர திமுக ஆட்சியில் கொலைக்களமாகும் அரசு நிறுவனங்கள்” – நயினார் நாகேந்திரன்!

அரசு மருத்துவமனையில் ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திமுக ஆட்சியில் உள்ள சட்டம் ஒழுங்கை அடிக்கோடிட்டு காட்டுகிறது.

ஏற்கனவே, எலிகள், நாய்களை உலவ விட்டு, பொதுமக்களின் உயிரைப் பறிக்கும் நோய்களின் கூடாரமாக மாற்றி அரசு மருத்துவமனைகளைச் சீரழித்தது போதாதென்று, தற்போது ரவுடிகளுக்கு இடையிலான சண்டைக்களமாக மாற்றி, அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களின் பாதுகாப்பை அடியோடு பறித்துள்ளது திமுக அரசு.

இது ஒருபுறமிருக்க பள்ளியில் கொலை, நீதிமன்ற வாயிலில் கொலை, காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு என அரசு நிறுவனங்கள் அத்தனையிலும் தனது துருப்பிடித்த இரும்புக் கரத்தினால் மக்கள் பாதுகாப்பை சிதைத்துள்ளது திமுக அரசு.

காலங்கள் மாறும் போது காட்சிகளும் மாறுவது போல அறிவாலயம் அரசால் உருவான கொலையுதிர் காலத்திற்குத் தேர்தல் காலத்தில் முற்றுப்புள்ளி வைப்பர் தமிழக மக்கள்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.