காதலனை ஏற்க மறுத்து காதலை கைவிட்ட இளம்பெண் வெட்டிக் கொலை… பட்டப்பகலில் நடந்த கொடூர சம்பவத்தால் பரபரப்பு… 3 தனிப்படைகள் அமைத்து தப்பியோடிய காதலனை கைது செய்த போலீசார்… கொலையின் பின்னணியை விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்..
திருநெல்வேலி மாவட்டம் திருப்பணிகரிசல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது 3வது மகள் சந்தியா நெல்லையப்பர் கோயில் அருகே அமைந்துள்ள தனியார் ஃபேன்சி ஸ்டோரில் ஊழியராக பணியாற்றி வந்தார். அக்.2-ம் தேதி வழக்கம்போல் பணிக்குச் சென்ற இளம்பெண் சந்தியா, மதியம் கடை வியாபாரத்திற்குத் தேவையான கூடுதல் பொருட்களை எடுத்துவர அருகிலுள்ள குடோனுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
ஆனால் சென்று வெகுநேரமாகியும் சந்தியா திரும்ப வராததால், சந்தேகமடைந்த சக ஊழியர்கள் குடோனுக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு சந்தியா பயங்கர வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்ட ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சம்பவம் குறித்து நெல்லை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக அங்கு சென்ற போலீசார் கொலை செய்யப்பட்டுக் கிடந்த இளம்பெண் சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், காதல் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கொலை நடந்திருப்பது தெரியவந்தது. கொலையாளியான 17 வயது நபரைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், சம்பவ இடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி கொலையாளியை போலீசார் தேடி வந்தனர். தீவிர தேடுதல் வேட்டையின் மூலம் மேலமுனைஞ்சிப்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த இளம்பெண்ணின் காதலனை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மேலமுனைஞ்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது நபர் நெல்லை டவுன் பகுதியில் உள்ள கடையில் சில மாதங்களுக்கு முன் ஊழியராக பணியாற்றி வந்தது தெரியவந்தது. அப்போது அவருக்கும், இளம்பெண் சந்தியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் கடையில் ஏற்பட்ட சிறு பிரச்னை காரணமாக 17 வயது நபர் பணியில் இருந்து நின்றுவிட்டதாக தெரிகிறது.
அதன்பிறகு காதலனுடன் பேசுவதை தவிர்த்துவந்த சந்தியா, ஒருகட்டத்தில் காதலை முற்றிலுமாக கைவிட்டு இனி தன்னை சந்திக்க வேண்டாமென காதலனான 17 வயது நபரிடம் கூறியுள்ளார். அதன் காரணமாக சந்தியாவின் காதலன் அவரது சகோதரியை செல்போனில் தொடர்புகொண்டு பேசியதாக தெரிகிறது. இதனால் சந்தியாவின் காதல் விவகாரம் அவரது குடும்பத்தினருக்குத் தெரியவர, குடும்பத்தார் சந்தியாவை கண்டித்துள்ளனர். இதனால் கோபமடைந்த சந்தியா காதலனான 17 வயது நபரை தொடர்புகொண்டு தன்னை விட்டுவிடுமாறும், இனி சந்திக்க விரும்பவில்லை எனவும் கூறியதாக தெரிகிறது.
பின்னர் சம்பவத்தன்று சந்தியா கடையில் இருந்து குடோனுக்குச் செல்வதை நோட்டமிட்டு அறிந்த 17 வயது நபர் அவரை பின்தொடர்ந்து சென்று பேச முயன்றதாக தெரிகிறது. அப்போதும் சந்தியா பேச மறுத்ததால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த காதலன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சந்தியாவை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
விசாரணைக்குப் பின் 17 வயது சிறுவனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். நெல்லை டவுனில் பரபரப்பு நிறைந்த ரதவீதி பகுதியில் இளம்பெண் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







