சென்னையைச் சேர்ந்த பெற்றோரின் குழந்தை திருமலை திருப்பதியில் நள்ளிரவில் கடத்தப்பட்ட நிலையில், தனிப்படையினர் குழந்தையை 10 மணி நேரத்தில் மீட்டுள்ளனர்.
திருவண்ணாமலையை சொந்த ஊராக கொண்ட சந்திரசேகர், மீனா ஆகியோர் தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர். சந்திரசேகர் சென்னையில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். சந்திரசேகர் மீனா தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். அவர் இரண்டு நாட்களுக்கு முன் குடும்பத்துடன் ஏழுமலையான் தரிசனத்திற்காக குடும்பத்துடன் திருப்பதிக்கு வந்திருந்தார்.
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதன் காரணமாக இரண்டு நாட்கள் காத்திருந்து அவர்கள் தரிசனம் பெற்று வழிபட்டனர். நேற்று இரவு சாமி கும்பிட்ட பின் அவர்கள் திருப்பதிக்கு வந்து அங்கிருந்து சென்னை செல்ல திட்டமிட்டிருந்தனர். அப்போது சென்னை செல்வதற்கு பேருந்துகள் இல்லாத காரணத்தால் இரவு 12 மணிக்கு மேல் அவர்கள் திருப்பதி பேருந்து நிலையத்தில் அடுத்து வர இருக்கும் பேருந்துக்காக காத்திருந்தனர்.
சுமார் மணி 12:30 அளவில் மனைவி மீனா குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஏதோ காரணத்திற்காக சந்திரசேகர் அருகில் உள்ள கடைக்கு சென்றார். இவர்களை கவனித்து கொண்டிருந்த மர்ம நபர்கள் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி
அவருடைய இரண்டு வயது மகன் முருகனை கடத்திச் சென்று விட்டனர். சந்திரசேகர் திரும்பி வந்து பார்த்தபோது இரண்டு வயது முருகனை அங்கு காணவில்லை.
மீனா மற்றும் அவருடைய நான்கு வயது மகன் ஆகியோர் மட்டுமே தூங்கிக் கொண்டு இருந்தனர். இதனால் செய்வது அறியாத திகைத்த சந்திரசேகர் உடனடியாக அங்கிருந்த போலீசாரிடம் தகவல் கூறினார். போலீசார் பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சிறுவனை கடத்தி சென்றவனை கண்டுபிடிப்பதற்காக திருப்பதி போலீஸர் ஐந்து தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். குழந்தையை தேடி வந்த காவல்துறையினர், 10 மணி நேரத்தில் குழந்தையை மீட்டுள்ளனர். பேருந்து நிலையத்தில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து சுதாகர் என்பவரிடமிருந்து குழந்தையை காவல்துறையினர் மீட்டனர்.







