பாடலாசிரியராக திரையுலகில் ஜொலித்த இயக்குநர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு.
திரைவானில் முழுநிலவாக சிலர் ஒளிவீசினாலும், சிலர் துருவ நட்சத்திரங்களாக ஜொலிப்பது உண்டு. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன், வாலி என பல கவிஞர்கள் பாட்டுக்கோட்டை கட்டினாலும் தங்கள் பங்குக்கு சில ஹிட் பாடல்களை தந்த கவிஞர்களும் உண்டு.
தமிழில் இயக்கிய முதல் திரைப்படமான சாரதா என்ற திரைப்படம் தேசிய அளவில் பேசப்பட்ட நிலையில் பெருமைக்குரிய இயக்குநராக கருதப்பட்ட கே.எஸ்.கோபால கிருஷ்ணன் சிறந்த பாடலாசிரியர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
1929ல் கும்பகோணத்தில் பிறந்த கே.எஸ். கோபாலகிருஷ்ணன், உடுமலை நாராயணகவி, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சிபாரிசில் பாடலாசிரியராக திரையுலகில் பிரவேசித்தார்.
அன்னையின் ஆணை, அமரதீபம் , எதிர்பாராதது, தெய்வப்பிறவி, அரசிளங்குமரி ஆகிய திரைப்படங்களுக்கு கோபாலகிருஷ்ணன் பாடல் எழுதினார். எல்லாம் உனக்காக, தெய்வப்பிறவி, குமுதம், படிக்காத மேதை ஆகிய திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதிய அவர், இயக்குநர் ஸ்ரீதரிடம் உதவியாளராக பணியாற்றினார்.
ஏ.எல் ஸ்ரீனிவாசன் தயாரிப்பில் சாரதா திரைப்படத்தின் மூலம் திரைக்கதை, வசனம், இயக்கம் என இயக்குநர் பணியைத் தொடங்கினார். அவர் இயக்கிய பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. சாரதா, கற்பகம், கை கொடுத்த தெய்வம் என தொடர்ந்து மூன்று படங்களும் அரசின் விருதைப் பெற்றன. ‘பணமா பாசமா’ என்ற திரைப்படம் ரஷ்யாவின் தாஷ்கண்டில் திரையிடப்பட்டது. அப்போதைய சோவியத் ஒன்றியமான யு.எஸ்.எஸ்.ஆர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கியது.
சிவாஜி நடித்த உத்தமபுத்திரன் திரைப்படத்தில் இடம்பெற்ற உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே என்ற பாடலை எழுதியது கோபாலகிருஷ்ணன்.
நடிகைகள் கே.ஆர் விஜயா, ஜெயசித்ரா, பிரமிளா, விஜயநிர்மலா ஆகியோரை திரையுலகில் அறிமுகம் செய்தவர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்.







