இந்தியா கட்டுரைகள்

ராஜ்ஜியம் இழந்த ராஜா: எடியூரப்பா முழுமையாக ஆட்சி செய்ய முடியாது ஏன்?


வரலாறு சுரேஷ்

ஒரு இன்ச் கூட நகர்த்த முடியாமல் இருக்கும் லிங்கத்தை, ஒற்றை ஆளாக தோளில் சுமந்து செல்லும் பாகுபலியை போல, மத்திய மற்றும் வடமாநிலங்களில் கோலோச்சிய பாஜகவால், தென்னிந்தியாவிலும் ஆட்சியை கைப்பற்ற முடியும் என, அரசியல் கட்சிகளுக்கு பாடம் எடுத்து, அரியணை ஏறியவர் தான் எடியூரப்பா.

கர்நாடகாவில், ஏன்? தென்னிந்தியாவிலேயே, எடியூரப்பாவுக்கு முன்பு வரை, பாஜக முதலமைச்சராக ஒருவர் பதவியேற்றதாக வரலாறில்லை. ஆனால், அந்த வரலாற்றை திருத்தி எழுதினார் எடியூரப்பா. ஒரே ஒரு துரதிருஷ்டம். தான் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில், முழுமையாக 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் வாய்ப்பு மட்டும் இவருக்கு வாய்க்கவேயில்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஒரு ரைஸ் மில்லில், சாதாரண கிளார்க்காக பணியில் சேர்ந்தவர், ஜனசங்கத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கியதில் இருந்து, அரசியலில் காலடி எடுத்துவ் வைத்தார். 1972ல் கே.ஆர்.பேட் தாலுக்காவின் ஜனசஙக் தலைவராகப் பொறுபேற்றவர், 1975ல் எமர்ஜென்சி காலங்களில், 45 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார். எமர்ஜென்சிக்கு பிறகு அரசியல் கட்சிகளில் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப்பட்டது. அப்படி பாஜகவால் அடையாளம் காணப்பட்டார் எடியூரப்பா. 1983- ம் ஆண்டு முதல் முறையாக கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்ட எடியூரப்பா, தொடர்ந்து 6 முறை ஷிகாரிபுரா தொகுதியில் இருந்து சட்டசபைக்கு சென்றார். 1988-ம் ஆண்டு, மாநில பாஜக தலைவரானவர், அடுத்த 6 ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவராகும் அளவுக்கு வலுவான பின்புலத்தை கட்டி அமைத்தார்.

2004 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தாலும், தொங்கு சட்டப்பேரவையே அமைந்தது. இங்கு தான் காய் நகர்த்தினார் எடியூரப்பா. காங்கிரஸுக்கு ஆதரவளித்த மதசார்பற்ற ஜனதா தளத்துடன் பேச்சு நடத்தி, குமாரசாமியும், எடியூரப்பாவும் தலா 20 மாதங்கள் முதலமைச்சராக பதவி வகிப்பது என ஒப்பந்தம் போட்டார். இந்த ஃபார்முலாவால் காங்கிரஸ் பெரும்பான்மை இழக்க, எடியூரப்பா ஆதரவில் முதலமைச்சரானார் குமாரசாமி. ஆனால், 20 மாதங்களுக்கு பிறகும் குமாரசாமி ஆட்சியில் நீடிக்க விரும்பியதால், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதனால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

 

இருதரப்பு அமர்ந்து பேசியதன் விளைவாக குமாரசாமி ஆதரவுடன் எடியூரப்பா முதலமைச்சரானாலும், பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமி ஆதரவளிக்காததால், 7 நாளில் எடியூரப்பாவின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இதன் பிறகு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஆனால், 2008ல் வந்த தேர்தலில் எடியூரப்பா தான் யார் என்பதை நிரூபித்தார். பாஜக 110 தொகுதிகளை கைப்பற்ற, பெரும்பான்மைக்கு 3 இடங்கள் குறைவாக இருந்ததால், சுயேட்சை எம்.எல்.ஏக்கள் 6 பேரின் உதவியுடன் அரியணை ஏறினார் எடியூரப்பா. ஆனால், தாது சுரங்க விவகாரம் அவரை மடக்கி போட்டது. லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் பதவியில் இருந்து விலகிய எடியூரப்பா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தான் பாஜக மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், “கர்நாடக ஜனதா பக்ஷா” என்ற கட்சியை தொடங்கினார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்ட போது, கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் பாஜகவில் இணைந்தார் எடியூரப்பா.

2018ல் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 104 தொகுதிகளை வென்ற பாஜக ஆட்சி அமைத்தது. எடியூரப்பா முதலமைச்சரானார். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்காததால் ஆட்சி கவிழ்ந்தது. இதனை அடுத்து காங்கிரஸ் – ஜனதா தளம் சார்பில் குமாரசாமி பதவியேற்றாலும், அவரது தலைமையிலும் 14 மாதங்களே ஆட்சி நீடித்தது. இந்த நிலையில் தான், 2019-ம் ஆண்டு 4-வது முறையாக முதலமைச்சராகப் பதவி ஏற்றார் எடியூரப்பா. அவர் பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைய இருந்த சில தினங்களிலேயே எடியூரப்பா ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. அவரை மாற்றும் எண்ணமே இல்லையென்று தெரிவித்தார் பாஜக தலைவர் நட்டா. ஆனால், ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்திருக்கிறார் எடியூரப்பா.

மீண்டும் எடியூரப்பாவுக்கு வாய்ப்பளிக்கப்படுமா? இல்லையா என்பதெல்லாம், கட்சி மேலிடத்தின் முடிவு என்றாலும், ராஜ்ஜியம் இல்லை என்றாலும் அவர் ராஜாதான் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல் – புதுச்சேரியில் மார்ச் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

G SaravanaKumar

நாயகன் & தளபதி: இருபெரும் கிளாசிக் படங்களில் இடம் பெற்றுள்ள முக்கிய லொகேஷன்கள்!

Yuthi

12 – 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி

G SaravanaKumar