நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, “அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு சீனா, ரஷியா மற்றும் பிற சக்திகள் சவால் விடுகின்றன. போர் சகாப்தம் முடிந்துவிட்டதாக பிரதமர் மோடியும், பாதுகாப்பு ஆலோசகரும் சில நாள்களுக்கு முன் தெரிவித்தார்கள். ஆனால், நாம் போர் சகாப்தத்துக்கு மத்தியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உக்ரைன், காஸா, மத்திய கிழக்குகளில் போர் நடைபெற்று வருகின்றன. ஈரானில் போர் அச்சுறுத்தல் இருக்கிறது. நாமும் ஆபரேஷன் சிந்தூரை சந்தித்தோம்.
காங்கிரஸ் பார்த்து பார்த்து உருவாக்கிய இந்தியாவின் ஐ.டி துறை தற்போது ஆபத்தில் உள்ளது. லட்சக்கணக்கான ஐடி ஊழியர்களின் வேலைகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பெரும் ஆபத்தில் இருக்கிறது. AI தொழில்நுட்பத்தின் எரிபொருளே நம்முடைய தரவுகள் தான். உலகிலேயே அதிக தரவுகளை (DATA) வழங்கும் நாடுகள் இந்தியாவும், சீனாவும் தான். ஏனென்றால் நமது மக்கள் தொகை எண்ணிக்கை அப்படி. ஆனால் இந்த தரவுகள் பாதுகாப்பானதாக இருக்கிறதா என்பது தான் மிக முக்கியமான கேள்வி ஆகும்.
அமெரிக்கா தனது டாலரை வைத்துக்கொண்டு உலகத்தையே ஆட்டிப்படைக்க பார்க்கிறது. இந்தியா மீது பெரும் பொருளாதார ஆயுதத்தை பிரயோகிக்கிறது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து கொண்டிருக்கிறது. அதனால் தங்கம், வெள்ளியின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. ஆனால் அதனை சரி செய்யும் வகையில் எதையும் இந்த பட்ஜெட் கூறவில்லை. அமெரிக்கா தொடர்ந்து சூப்பர் பவராகவே இருக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது இந்தியர்களுடைய தரவுகள் மட்டும் தான். நமது மக்கள்தொகை தான் நம்முடைய பலம்.
நாங்கள் டிரம்பிடம் பேச்சுவார்த்தை நடத்தினால், முதலில் கூறுவது, சமமாக பேச வேண்டும், உங்களின் ஊழியர்களை போல் நடத்தக் கூடாது. இரண்டாவது எங்களின் எரிசக்தி பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்வோம். அடுத்து, உங்கள் விவசாயிகளை நீங்கள் பாதுகாக்க வேண்டும் என்பது புரிகிறது. ஆனால், நாங்கள் எங்களின் விவசாயிகளை பாதுகாப்போம்.
ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் ராணுவ தளபதியை காலை உணவுக்கு அழைத்து உபசரிக்கிறார். அப்போது இந்த அரசு அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருந்தது. இந்தியர்களுடைய அத்தனை தரவுகளையும் ஒட்டுமொத்தமாக அமெரிக்காவுக்கு மத்திய பாஜக அரசு விற்றுவிட்டது. வெறும் 3% இருந்த இந்தியாவிற்கான வரியை தற்போது அமெரிக்கா 18 சதவீதமாக உயர்த்தி உள்ளது.
இதனால் பல நூறு பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நமது நாட்டுக்கு இழப்பு ஏற்படுகிறது. இது வெட்கக்கேடானது. இந்தியாவின் தரவுகள் முழுவதையும் அமெரிக்கா எடுத்துக்கொள்வதன் மூலமாக இந்தியாவுக்கு எவ்வளவு பெரிய பாதுகாப்பு ஏற்படும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியாமல் இல்லை.
அவருக்கு அனைத்தும் தெரியும், ஆனால் தெரிந்துதான் இதை செய்திருக்கிறார். வங்கதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிக்கான வரியை அமெரிக்கா பூஜ்ஜியமாக குறைத்துள்ளது.
ஆனால் நமக்கு 18 சதவிகிதம் வரி விதித்துள்ளது. இவ்வாறு இருந்தால் நமது நாட்டின் ஜவுளித்துறை எப்படி உயிர்ப்புடன் இருக்கும். மேலும் இந்தியா யாரிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை அமெரிக்கா தான் முடிவு செய்கிறது. அமெரிக்காவின் விவசாய பொருட்களுக்காக இந்தியாவின் கதவுகளை நீங்கள் மிகதாராளமாக திறந்து விட்டிருக்கிறீர்கள்.
இது நமது நாட்டின் விவசாயிகளுக்கு பேரிடியை இறக்கப் போகிறது என்பது உங்களுக்கு தெரியவில்லையா? இந்த செயல் நமது விவசாயிகளை அவமானப்படுத்தக் கூடிய விஷயம் ஆகும். இதற்கு முன்பு நாட்டை ஆண்ட எந்தவொரு பிரதமரும் செய்ததில்லை. இதற்கு பின்னர் வரப்போகும் பிரதமர்களும் செய்ய மாட்டார்கள். நீங்கள் இந்தியாவை விற்று விட்டீர்கள். எங்களது பாரத மாதாவை அமெரிக்காவுக்கு விற்று விட்டீர்கள் என்று தெரிவித்துள்ளார்.







